Sunday, January 6, 2013


                                                               தலைப்பு--------------’-தோற்றப்பிழை’
                              ஆக்கம்---------------செய்யாறு. தி.தா.நாராயணன்
        “இங்கே எல்லா அரசியல்வாதிகளும் சாதிய வெச்சித்தானய்யா பொழப்ப ஓட்றாங்க. சாதிக் கலவரத்தைத் தூண்டி விட்றதே இவங்கதான்.பலியாவறது அப்பாவி ஜனங்க. இதான் நம்ம தலையெழுத்து. என்ன பண்றது?.”

சமீபத்தில் மதுரைப் பக்கம் நடந்த சாதிச் சண்டையில் நாலைந்து பேர் செத்துப் போனதைப் பற்றி பேச்சு வந்த போது மதிவாணன் என்கிற எங்கள் மதிப்பிற்குரிய மதி சார் இப்படித்தான் தன் பேச்சை ஆரம்பித்தார். நாங்கள் என்பது மணி ஆகிய நான், நண்பர் தினகர், அப்புறம் தமிழ் வாசகர்களுக்கு பரிச்சயமான எழுத்தாளரும், உள்ளூர் மேநிலைப் பள்ளி ஆசிரியருமான மதி சார். எங்களைப் பிணைத்தது இலக்கியம், அடுத்ததாய் அரசியலும், நாட்டு நடப்புகளும்.

“சார்! நாகூர் ஆண்டவர் கோவிலில் நெரிசலுக்குக் காரணம் முஸ்லீம்கள் இல்லை, இந்துக்கள். வேளாங்கன்னி மாதா கோவிலுக்குப் போறவர்களில் பாதிக்கு மேல் இந்துக்கள்தான். நாம இவ்வளவு பெருந்தன்மையாய் இருந்தும், நம்ம இடங்கள்லதான் குண்டு வெடிக்குது..”---- என்றேன். தினகர் குறுக்கிட்டார்.
“மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய  பாகிஸ்தான் தீவிரவாதிகள் வழக்கில் தீவிரவாதி கசாபுக்கு மரண தண்டனை வழங்கியதற்கு, அங்கு வசிக்கும் முஸ்லீம்கள் ஆதரவு தெரிவித்து ஊர்வலம் நடத்தினார்கள்.அதுமட்டுமில்லை கசாபுவை முச்சந்தியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று கோஷமிட்டார்கள். இதுக்கு என்ன சொல்ற?.எல்லா இடங்களிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்யறாங்க..”------மதி சார் என் தோளைத்தட்டினார்.

“இதிலிருந்து என்ன தெரியுது?. மக்கள் ஒழுங்காகத்தான் இருக்காங்க. சாதியைச் சொல்லி, மதத்தைச் சொல்லி உசுப்பிவிட்றது அரசியல்வாதிங்க. ராஜாஜி, கக்கன்ஜீ, அம்பேத்கர்,பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், காமராசர், இப்படி இன்னும் எத்தனை தேசியத் தலைவர்கள்?. நாம என்ன பண்ணோம்?.அவர்களையெல்லாம் அந்தந்த சாதிக் கட்சிகளின் ஆதர்ச புருஷர்களாகவும்,தலைவர்களாகவும் சேர்த்துக் கொண்டு  பேனர் போட்டுக் கொண்டோம். எல்லா சாதிக் கட்சிகளையும் ஒழிக்கணும்யா. அப்பத்தான் நாடு கொஞ்சமாவது உருப்படும். எஸ்! ஒழிச்சிக் கட்டணும்.”

மதி சார் பொரிந்துத் தள்ளிவிட்டார். அவர் எப்பவும் இப்படித்தான். சில சமயம் ஆவேசம் மேலிட கூச்சல் போடுவார். பகுத்தறிவு சிந்தனையாளர், சமூக பிரக்ஞை கொண்டவர், சீர்திருத்தவாதி. அவருடைய கதைகளில் கடவுள்களும், சாதி வெறிகளும், பிரதானமாய் தாக்கப்படும். சாதிவெறியும், மதவெறியும்தான் நம் நாட்டு வளர்ச்சியின் முட்டுக்கட்டைகள் என்பார். ஊருக்குள் அவருக்கு நல்ல மரியாதை ஊண்டு. எனக்கும்,தினகருக்கும் அவர்தான் ரோல்மாடல்.

              லேசாய் இருட்டிக் கொண்டு தூறல் போட ஆரம்பித்தது.. கொசுத்தூறலில் நடப்பதி ஒரு சுகம். அனுபவித்தபடி நடந்தோம். சி.கே.தியேட்டரைத்தாண்டினோம். சாலையின் இருபுறங்களிலும் கட்சிகளின் பெரிய பெரிய பேனர்கள். அவற்றில் கட்சிகளின் படாபடா ஆத்மீக்கள். தான் கொள்ளையடித்த, அடிக்கப்போவதைப் பற்றிய எவ்விதக் கூச்சங்களுமின்றி லைஃப் சைஸில் சிரித்துக் கொண்டிருந்தனர். கூடவே தரணியே!, எதிர்காலமே! மூச்சே!, விடியலே! விடிவிளக்கே!, போன்ற வாசகங்கள் வேறு. காந்தி சிலையருகில் கட்சிக் கொடிகளின் அணிவகுப்பு. காந்தி நட்டின் பொது சொத்தல்லவா?, எல்லாக் கட்சிகளுக்கும் அவரை பங்கு போட்டுக் கொண்டு கொள்ளையடிக்க  உரிமை இருக்கிறதாம்.

             எல்லாக் கட்சிகளும் தத்தம் உறுப்பினர் அடையாள அட்டைகளைக் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்தன.. மக்களும் உஷார் பார்ட்டிகள்தான். எல்லோரிடமும் எல்லாக் கட்சிகளின் உறுப்பினர் அட்டைகளும் இருக்கின்றன. ஜெயிக்கிற கட்சியின் உறுப்பினர் அட்டை மட்டும் ஆக்டிவேட் ஆயிரும். பார்த்துக் கொண்டே நடந்தோம். ஈஸ்வரி லாட்ஜ் வாசலில் ஒரே கூட்டமாயிருந்தது. தடித்த பேச்சுக்களும், அழுகைக் குரல்களும் கெட்கின்றன.

”டாய்!...டாய்!....புடி அவனை….அடிப்பாவி! இது உனுக்கு அடுக்குமாடீ!.”

என்னவோ பிரச்சினை வெடித்திருக்கிறது. இது போன்ற விஷயங்கள் மதி சாருக்கு அல்வா சாப்பிட்ற மாதிரி. வேடிக்கைப் பார்க்க அல்ல,பிரச்சினையில் புகுந்து அதை சரிகட்டப் பார்ப்பார். கூட்டத்தில் புகுந்து விட்டார், நாங்களுந்தான். அங்கே சிவப்பாய், அழகாய், பாவாடை தாவணியில் ஒரு பெண் நிற்க, அவள் கையைப் பற்றிக் கொண்டு ஒரு நீலக்கலர் சட்டை இளைஞன் நின்றிருந்தான். எதிரே அழுதபடி சற்று வயசான தம்பதியும், அவர்களை ஆற்றுப்படுத்தியபடி ஒரு சிவப்புச் சட்டையில் ஒரு வாலிபனும் நின்றிருந்தனர். வாலிபன் அவர்களின் மகனாக இருக்க வேண்டும், ஜாடை தெரிகிறது..

“காதல் ஜோடி விவகாரம்.”----மதி சார் கண் சிமிட்டினார்.

’ரொம்ப சின்னப் பொண்ணுசார். விவரமில்லாம ஓடி வந்திட்டிருக்கு, பாவம்.”---என்றென்.
“ரெண்டும் ரெண்டு நாளா இந்த லாட்ஜிலதான் தங்கியிருந்திச்சிங்களாம். பொண்ணைப் பெத்தவங்க தேடித்தேடி இப்பத்தான் கண்டுபுடிச்சிருக்காங்க. இம்மாம் சின்ன வயசில என்னா தைரியம் பாருங்க. அந்தப் பொண்ணு மொகத்தில இன்னும் கொழந்தை அம்சமே  போவல..’----தினகர் சற்று கோபமாய் சொன்னார்
“இருங்க என்னா நடக்குதுன்னு பார்ப்போம்.”.----மதிசார்.

பெரியவர் வேகமாய் வந்து அந்த நீலசட்டைக்காரனைப் பிடித்து உலுக்கினார்.

‘டேய்!...டேய்!...பாவி! புள்ளை மாதிரி நெனைச்சிருந்தோம், இப்படி பண்ணிட்டியேடா/. உருப்படுவியா நீ?. ஐயோ! ஊர்ல எப்படி தலை காட்டுவேன்?. பலானவன் பொண்ணு வேற சாதிப் பையனோடு ஓடிட்டாள்னு தெரிஞ்சா, காரித் துப்பிடுவாங்களே. எங்க சாதியில ஒதுக்கி வெச்சிடுவாங்களே.ஊரே கைத்தட்டிடுமே. பெருமாளே! பெருமாளே!...ஆ!...ஆ!.”

ஆயாசத்துடன் அவர் சாய, ரெண்டுபேர் ஓடிவந்து பிடித்துக் கொண்டனர். நாலைந்து பேர் ஓடிப்போய் நீலச்சட்டையை அடிக்க ஆரம்பித்தனர். மதி சார் குறுக்கே பாய்ந்தார்.

“யோவ்! நிறுத்துய்யா…ஏய்! நில்றா! இங்க வந்து அடிக்கிற வேலையெல்லாம் வெச்சிக்காதீங்க. நியாயத்தைப் பேசுவோம், பேசி முடிவெடுப்போம்..”

“ஆமாமா! வாத்தியாரு சொல்றதுதான் சரி.”----கூட்டத்திலிருந்து குரல்கள் எழுந்தன. அப்போது பெண்ணின் அம்மா ஓவென்று அழுதுக் கொண்டே வந்து, பெண்ணின் தலையில் ஒரு அடி போட்டாள்..
“அடிப்பாவி! அப்பிடி என்னா வயசாயிடுச்சின்னு இந்த வேலை செஞ்சடீ?.நாம என்னா சாதி, அவன் என்னா சாதி?. இது அடுக்குமா உனக்கு?.இந்த கயிதைக்கு குந்த ஒரு குடிசை இருக்குதா?. இவன் நல்லவன் இல்லடீ. நட்டாத்தில கையை வுட்ருவான். வாணாண்டீ கண்ணூ! வந்துடு. அப்பாவை நானு சமாதானப் படுத்திக்கிறேன்.வாடீ1.”

அவள் அம்மாவின் கையை உதறித்தள்ளிவிட்டு ஓடிப்போய் நீலச்சட்டைக்காரனுடன் ஒட்டிக் கொண்டாள். அம்மாக்காரி தலைதலையென்று அடித்துக் கொண்டு அழுதாள். பெண்ணின் அண்ணன் இப்போது நீலச்சட்டையிடம் வந்தான். அவனைத் தீர்க்கமாகப் பார்த்தான்..

‘டேய் கதிர்வேலு! ஃப்ரண்டுக்கு அர்த்தம் தெரியுமாடா உனக்கு?. அடுத்துக் கெடுக்கிறதா?..”-----நீலச்சட்டை எந்தவித பிரதிபலிப்புமின்றி நின்றான். அதற்கு மேல் ஒரு வார்த்தைகூட அவனை திட்டிப் பேசவில்லை. கண்களை துடைத்துக் கொண்டு தங்கச்சியிடம் வந்தான்.

“மஞ்சு! என்னம்மா இதெல்லாம்?. நீயான்னு இருக்கு?. இவ்வளவு சின்ன வயசிலியா? ஊர்ல நம்ம குடும்பம் இருக்கிற கவுரவத்துக்கு நீ இப்படி செய்யலாமா?. வேணாம்டீ. இவன் நல்லவன் இல்லை, நம்பிப் போவாத. பின்னால அவ்வளவுக்கும் சேர்த்து வெச்சி அழுவணும். வந்திட்றீ!.”

“இல்லண்ணா! நான் வரமாட்டேன்..”----அவள் தீர்மானமாகப் பேசினாள்.. அண்ணன் சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

“இதுதான் உன் தலையெழுத்துன்னா என்ன பண்ண முடியும்?. தெரிஞ்சிக்கோ.இன்னியோட சரி. எல்லாம் முடிஞ்சிப் போச்சி. இனிமே நீ செத்துட்டாலும் நாங்க யாரும் வரமாட்டோம். நாங்க செத்தாலும் உனக்கு தகவல் வராது. இது சத்தியம்.”

“சார்! பாருங்க. இவனுடைய சத்தியம் அவளிடம் எந்த மாற்றத்தையும் உண்டாக்கலியே.”
“இதன் அர்த்தம் அவளுக்குப் புரிஞ்சுதோ இல்ல்லையோ.சின்னப் பொண்ணுய்யா.”---என்றார் மதி சார். அப்பா ஓடிவந்து அந்தப் பெண்ணை அணைத்துக் கொண்டார்.

“ஏண்டா கொழந்தைய திட்ற.?. விவரம் பத்தாதுடா. கொழந்தைடா.நல்லது கெட்டது தெரியாத வயசு.. என்னா தெரியும்?. கண்டதே காட்சி, கொண்டதே கோலம். எதையும் யோசிக்காம அடாதுடியா செஞ்சிட்ற பருவம். மஞ்சு குட்டி! அப்பா சொல்றத கேளுடா. வாணான்டா. இவன் நல்லப் பையன் இல்லை, துரோகி, சீரழிஞ்சிப் போயிடுவே. தப்புப் பண்ணிட்ட, பரவாயில்ல, மறந்துடு. வா வீட்டுக்குப் போவலாம். திட்டமாட்டேன். மன்னிச்சிட்டேன். சரியா?.”

               அந்தப் பெண் மூர்க்கத்துடன் அவரை உதறிவிட்டு நீலச்சட்டைக்காரனுடன் போய் நெருங்கி நின்று கொண்டாள். அப்பனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

“அடிப்பாவி! என்னா துணிச்சல்?. காதலின் வலிமையைப் பாருங்கப்பா. இந்தக் காதல்கள்தான்யா கொஞ்சங்கொஞ்சமாய் சாதிகளை ஒழிச்சிக் கட்டப் போகின்றன. மானுடர்களே!ஆதலினால் காதல் செய்வீர்..”---சொல்லிவிட்டு மதிசார் சிரித்தார்

“ யோவ் பெரியவரே! அவதான் வரமாட்டேன்னு தீர்த்து சொல்றாளே, வுட்டுத் தொலையேன். இல்லேன்னா கூட்டிட்டுப் போயி கவுரவமா இவனுக்கே கட்டி வெச்சிடு, தப்பில்லை..’
‘ அட இது மைனர் பொண்ணுய்யா. கடத்திக் கொண்டாந்திருக்கான். கம்ப்ளையிண்ட் குடுத்து எஃப்.ஐ.ஆர். போட்டாச்சின்னா மாப்பிள்ளை களி திங்க வேண்டியதுதான். இவளுக்கு எது நல்லதுன்னு பெத்தவங்களுக்குத்தான தெரியும்?..-------கூட்டத்தில் ஆளாளுக்கு தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். மதி சார் அந்தப் பெண்ணை கூப்பிட்டார்.

“இதோ பாரும்மா! எல்லோருமே இவன் நல்லவன் இல்லேன்றாங்க. நீ நிதானமா யோசிச்சி பதில் சொல்லு. இவன்கூட போவப்போறீயா?, இல்லே உன் அப்பா கூட போவ சம்மதிக்கிறியா?.”------அவள் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை.

“என் வீட்டுக்குப் போவமாட்டேன். என்னை இவர்கூட சேர்த்து வையுங்க. இவர் இல்லேன்னா நான் உசுரோடவே இருக்கமாட்டேன். சத்தியமா செத்துடுவேன்..”-----அவள் பித்துப் பிடித்தவள் போல கைகளை வீசிவீசி உரத்தக் குரலில் பேசினாள். ஒரு குழப்பம் இல்லை. பதில் தெளிவாக அதேசமயம் தீர்க்கமாக வந்தது. எல்லோரும் ஸ்தம்பித்து நின்று விட்டோம்.. பெற்றவர்கள் தலையில் கையை வைத்துக் கொண்டார்கள்.

“ஐயா! வெவரமில்லாத பொண்ணுங்க, வெகுளி, ஒரு மண்ணுந்தெரியாது. எதையும் உடனே நம்பி எடுத்தேன் கவுத்தேன்னு செஞ்சிட்ற பருவம். சண்டாளப் பாவி கொழந்தை மனசை இப்படி கெடுத்து வெச்சிட்டானே.”
மதி சார் போய் பெரியவர் கையைப் பிடித்தார்.

“ இப்ப இவங்களை சேர்த்து வெக்க எதுய்யா உன்னைத் தடுக்குது?. சாதியா?.”

“ஆமாய்யா! சாதிதான் என்னான்ற?. ”

“த்தூ! ஏன்யா இப்படி சாதி சாதின்னு வெறி புடிச்சி அலையறீங்க?. காலம் எவ்வளவோ மாறிப்போச்சி சாதி இன்னைக்கு மேல்தட்டு மனிதர்களிடமும் இல்லை, கீழ்த்தட்டு மனிதர்களிடமும் இல்லை. நம்மள மாதிரி நடுத்தர வர்க்கம்தான் புலம்பிக்கிட்டு திரியுது. மாறிடுங்க. உம்பொண்ணுதான் ஸ்டெடியா நிக்கிறாளே வுட்ருங்க..”

பெரியவர் மதி சாரை காட்டமாக முறைத்தார்.

“எங்களைப் பத்தி உங்களுக்கு என்னா சார் தெரியும்?. ஊர்ல நாலு பேருக்கு வழி காட்றாப்பல பெருமையா வாழ்ந்தோம்.எல்லாம் போச்சு. இந்த வேஷ்டிய எதுக்குக் கட்றோம்?. மானத்துக்குத்தானே?. அதுவே போயிடுச்சிய்யா. அப்புறம் என்னா இருக்கு?.என்னதான் சாதி இல்ல சாதி இல்லன்னு கரடியா கத்தினாலும் ஒவ்வொருத்தனுக்குள்ளும் அது இருக்குதுய்யா. ஹும்! தலைவலியும், வயித்துவலியும் தனக்கு வந்தாத்தான் தெரியும்.. உம்..போங்க சார்.நாட்ல புத்திசொல்றதுன்னா ரெடியா துண்டை தோள்ள போட்டுக்குணு வந்துட்றீங்க.”

நான் கோபத்துடன் பெரியவர் முதுகில் ஒரு தட்டு தட்டினேன்.

“பெரியவரே! அளந்து பேசு.இவர் யாரு தெரியுமா?.”----மதி சார் மேற்கொண்டு என்னைப் பேச விடவில்லை.

“ஐயா! இவள் உங்க பொண்ணு. வாழ்ந்து முடிச்ச உங்க கவுரவத்தை விட, உங்க பொண்ணுடைய வாழ்க்கை பெருசு, இல்லையா?.எதையும் சுயநலமா முடிவு பண்ணாதீங்க..”

அவர் கொஞ்ச நேரம் மவுனமாக நின்றார்.நிமிர்ந்த போது கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.

“எதுய்யா சுயநலம்? என் பொண்ணோட வாழ்க்கை பாழாகிடக் கூடாதேன்னு அப்பன் கவலைப் பட்றதா சுய நலம்?. அவனைப் பாருங்க பரம ஏழை. அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். அப்பன் எப்பவோ போயிட்டான். கூலிவேலை செய்ற அம்மாவின் கஷ்டத்திலதான் கஞ்சி. இப்படிப் பட்டவன் எப்படி இருக்கணும்? நாம படிச்சி முடிச்சி என்னைக்கு அம்மா கஷ்டத்தை வாங்கிக்கப் போறோமோன்னு மனசு துடிக்கணும். படிப்பு மேல கவனமா இருக்கணும். அவன் மனுசன். இவரு காதல் பண்ணிக்கிட்டு திரியறாரு. தொர இப்பத்தான் பி.காம். ரெண்டாம் வருஷம் படிக்கிறாரு. எம் பொண்ணு டெந்த் பாஸ் பண்ணிட்டாள். ப்ளஸ் ஒன் சேர்க்கணும். எதைப் பத்தியும், யாரைப்பத்தியும் கவலையில்லேன்னு இவன் கூட வந்துட்டாளே.நாளைக்கு பூவாவுக்கு வழி?.சொல்லுங்கய்யா. ரெண்டு இட்லிதான் சாப்புடுவா.அதுக்கு மூணு சைட்டிஷ் வேணும் இவளுக்கு. இவ சித்திரை மாசம் பொறந்தவ. மூணு மாசக் கொழந்தையில வெய்யில் தீட்சண்யம் தாங்காம ஒடம்பு பூரா கட்டி வந்திடுச்சி. அன்னைக்கே இவளுக்காக வீட்ல ஏ.சி. போட்டுட்டேன். நேத்து வரைக்கும் ஏ.சி.யிலதான் தூங்கினா. உள்ளே துடிக்குதுய்யா. ஐயோ! எங்கொழந்த செல்வாக்கா வளர்ந்தவளாச்சே. எங்க போய் சீரழிஞ்சிடுவாளோ?. என்னா கஷ்டப் படுமோ?.பூஞ்சை ஒடம்பாச்சே .சோத்துக்கு திண்டாடுவாளோ?. இத்தையெல்லாம் நெனைச்சித்தான் அழுவுறோம்.”

சொல்லிவிட்டு குழந்தையைப் போல தேம்பினார். அம்மாவும் பிள்ளையும் சற்று தள்ளி நின்று குலுங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் தலை கவிழ்ந்து நின்றுக் கொண்டிருக்க, அந்தப் பையன் தூரப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான், எந்தவித ரீயாக்‌ஷனுமின்றி. இப்போது பெண்ணின் அப்பா கண்களைத் துடைத்துக் கொண்டு நீலச்சட்டை பையனை நெருங்கினார்

.டேய் கதிர்வேலு! குனியாதே. என்னை நேராப் பார்த்துப் பேசுடா. பதில் சொல்லு நீ யார்றா?. உனக்கும் எங்களுக்கும் என்னடா சம்பந்தம்?. நீ இப்படி செய்யலாமா? தர்மமா?. செஞ்சதை சொல்லிக் காட்டக் கூடாதுன்னு சொல்வாங்க. ஆனா நீ சொல்ல வெச்சிட்டியே. காலேஜ்ல என் கூட படிக்கிற ஃப்ரண்டுன்னுதான் என் பையன் உன்னைக் கூட்டியாந்தான். அப்பவே எங்குடும்பத்துக்கு கெட்ட நேரம் வந்திடுச்சின்னு தெரிஞ்சிக்காம போயிட்டோமே. நீ ரொம்ப ஏழைன்னு சொல்லி இந்த ஒரு வருசமா உன் காலேஜ் ஃபீஸை என் புள்ளைதானே கட்டிக்கிட்டு வர்றான்?. அவன் வாங்கிக் குடுத்த புக்ஸைத்தானே படிக்கிற?. இதுவரைக்கும் தப்பா ஒரு வார்த்தை சொல்லியிருப்போமா?. ஒரு ஏழை பையனுடைய படிப்புக்கு உதவி பண்றது புண்ணிய காரியம்னுதான் நாங்களும் சப்போர்ட் பண்ணோம். போதாக்குறைக்கு இவன் அம்மா இந்த வயசான காலத்தில, பி.பி., ஷுகர்னு ஆயிரம் கஷ்டங்கள் இருந்தும். தன் புள்ளை மாதிரியே உனக்கும் காலேஜுக்கு மதிய சாப்பாடு கட்டிக் குடுத்து,…பாவி….பாவி….!..ஒரு வருசமா சாப்பிட்டுப்புட்டு அப்புறம் எப்பிட்றா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண மனசு வந்துச்சி உனக்கு?. படுபாவி! இவளுக்கு என்ன வயசு?. நல்லது கெட்டது தெரியுமா?. இவளை நாசம் பண்ணிட்டியே. வயிறெரிஞ்சி சொல்றேன், நல்லா இரு. புண்ணியம்னு நெனைச்சது எங்குடிக்கு தீம்பா வந்து விடிஞ்சிட்டதே பகவானே!.”

               அப்போதுதான் அங்கே கூடியிருக்கிற எல்லோருக்கும் விவகாரத்தின் முழுபரிமாணமும் புரிந்தது.

“அட நன்றி கெட்ட நாயே! துரோகி. அட்றா அவனை, ஒதைங்கடா. கைய, காலை ஒடையுங்கப்பா..”---------மூலைக்கு மூலை கத்தினார்கள். எனக்கே தாங்க முடியவில்லை. கைகள் துறுதுறுத்தன. ராஸ்கல்! நம்பவெச்சி கழுத்தறுத்திருக்கிறானே.. மதி சாரைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஏற்கனவே கை நீளம் அவருக்கு. பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டிருந்தார்..
“மணி! காதல் திருமணத்தையும், கலப்புத் திருமணத்தையும் நாம வரவேற்கணும்தான். ஆனால் இவன் துரோகிய்யா. துரோகங்களை என்னைக்கும் மன்னிக்கவே கூடாது.. இப்படிப் பட்டவன் நாளைக்கு இந்தப் பொண்ணை கொன்னு போடவும் தயங்க மாட்டான். அந்தப் பொண்ணை இவன்கூட சேர்க்கக் கூடாதுய்யா..”

பெண்ணுடைய உறவினர்கள் ஒரு முடிவோடு பெண்ணை குண்டுக் கட்டாய் தூக்கி வேனில் ஏற்ற முயற்சித்தார்கள். அவள் கைகால்களை உதைத்துக் கொண்டு கூச்சல் போட ஆரம்பித்தாள். பெரியவர் நடப்பதைப் பார்த்து விட்டு

“டேய்!...டேய்!...வாணாம்…வாணாம். வுட்ருங்க. இவ இந்த லெவலுக்கு போயிட்டப்புறம் இழுத்துட்டுப் போயி என்ன பண்றது?. எத்தினி நாளுக்கு கட்டுக் காவல்ல வெச்சிருக்க முடியும்?. இங்கியே தலை முழுகிட்டுப் போவ வேண்டியதுதான்..”

அதைக் கேட்டுவிட்டு அம்மாவும் பிள்ளையும் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதார்கள். பெரியவர் தன் பிள்ளையைக் கூப்பிட்டார்.

“ எப்பா!  நான் சொல்றாப்பல செய்யிப்பா. பொண்ணு, புள்ளைய வேன்ல ஏத்திக்க. நம்ம ஜனங்களையும் கூட்டிக்கோ.நேரா ஒரு கோவிலுக்குப் போயி தாலிகட்டவெச்சி அவங்க கல்யாணத்த முடிச்சிடு. அப்படியே ரிஜிஸ்டர் ஆபீஸுக்கு கூட்டிம்போயி பதிவு பண்ணி வுட்ரு. பெத்த கடனுக்கு செய்ய வேண்டிய சீர்செனத்திகளுக்கு நான் ஏற்பாடு பண்றேன். ஒரு டெம்போ பேசி ஏத்தி அனுப்பிடலாம்.”
“சரிப்பா!.”

”கெளம்பு. எனக்கு பொண்ணே பொறக்கல. ஒரே பையந்தான்.”----மேல் துண்டில் முகத்தைப் பொத்திக் கொண்டார். இவ்வளவு நடந்ததுக்கும் கல்லுளிமங்கனாட்டம் வாயைத் திறக்காமலிருந்த நீலச்சட்டைக்காரன் முதல்முறையாக வாயைத் திறந்தான்.

“இந்தப் பொண்ணை நான் கட்டிக்க மாட்டேன்..”

“டாய்!...டாய்!...ராஸ்கோலு!. உதைக்காம நீ வழிக்கு வரமாட்டடீ. வாத்தியாரே! நீங்க கொஞ்ச நேரம் ஒதுங்கி நில்லுங்க நாங்க பார்த்துக்கறோம். இன்னிக்கு உனக்கு நாயடி பேயடிதாண்டியேய்!”
“அடீங்! இட்டாந்து லாட்ஜில ரூம் போட்டுட்டு, பொண்ணைக் கெடுத்துட்டு, நாயிக்கு திமிரைப் பார்றா. ஒதைங்கடா., மவனே! நாஸ்தியாயிடுவே.”

மதி சார் கயை உயர்த்தி கத்திய கும்பலை அடக்கினார். எட்டி கொத்தாக அவன் ஷர்ட்டைப் பிடித்தார்.

“உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணிய பொறம்போக்கு. டேய்! நீ பண்ணியிருக்கிற காரியத்துக்கு, அப்பவே உன்னை கூறுகூறா வகுந்திருக்கணும். இவங்கள்லாம் அப்பிராணிகளா இருக்கவும் பொழைச்சே.. சரி சரி……சொல்லு, ஏன் அவளை கட்டிக்க மாட்டே.”------அவன் மிடறு விழுங்கினான்.

“சொல்றா.”

“அவங்க சொல்றாப்பல இவள கட்டிக்கிட்டா அப்புறம் எங்களுக்கு சாப்பாட்டுக்கு வழியில்லை .”

‘அதுக்கு?.’

“ஊர்ல இவ அப்பா பேர்ல இருக்கிற நாலு ஏக்கரா,எழுபது செண்ட் பம்ப்செட்டை எம்பேருக்கு எழுதி வெச்சா கட்டிக்கிறேன்.”

அவ்வளவுதான் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் பீறிட பாய்ந்து விட்டார்.. பளார்பளாரென்று அறைந்துத் தள்ளிவிட்டார். நானும் என் பங்கிற்கு இரண்டு அடி போட்டுவிட்டு தூர விலகிப் போய், பால்வாடி ஸ்கூல் வேப்பமரத்தினடியில் நின்றேன். கூட்டத்திலிருந்தும் தர்ம அடி விழுந்தது. பொம்பளைகள் சிலர் அந்தப் பெண்ணிடம் போய் திட்டினார்கள்.

“டியேய்! போக்கத்தவளே!. பெத்தவங்களை சுலுவா தூக்கிப் போட்டுட்டு இவன் பின்னால ஓடியாந்தியே. எங்க நோட்டம் வெச்சான் பார்த்தியா?.காதலாம் காதலு. போ! போய் நாண்டுக்கிட்டு சாவு.”

அவள் பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு நின்றாள். அந்தப் பையன் பேசிய வார்த்தைகள் அவளுக்கு ஜீரணிக்க வில்லை போலும். அதிர்ச்சி அவள் கண்களில் தெரிந்தது. இவன் அப்படிப்பட்ட ஆளா?. கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்கிறது. அவன் கையைப் பற்றிக் கொண்டிருந்த பிடியை எப்போதோ விட்டுவிட்டிருந்தாள்.

              தினகரன் போய் நீலச்சட்டைப் பையனிடம் சண்டை போடுக் கொண்டிருந்த மதி சாரை நான் நின்றிருந்த வேப்பமரத்தினடிக்கு இழுத்துக் கொண்டு  வந்தார். மரத்துக்கு அந்த பக்கத்தில் நான் உட்கார்ந்திருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை.

“ராஸ்கல்! என்னா திமிர் பார்த்தியா?.என்னா வயசு?, அதுக்குள்ள எம்மாம் திருட்டு புத்திய்யா? என்னால நம்பவே முடியலய்யா. .நாலு ஏக்கரா எழுவது செண்ட்டுன்றதைக் கூட துல்லியமா பார்த்து வெச்சிருக்கான் பாரு.சே! ப்ளான் பண்ணி கெடுத்திருக்கான்யா.இது மனசையும் மனசையும் பார்த்த காதல் இல்ய்யா.. மனசையும் பணத்தையும் பார்த்து வந்த காதல். இவனை வுடக்கூடாது.செமத்தியா ஒதைச்சி தொரத்தறதே சரி. உம் சொல்லிட்டா ஜனங்களே பிச்சியெடுத்திடும். கச்சேரிதான். பொறுக்கி ராஸ்கல்,கன்னிங் ஃபெலோ.”-------அவருக்கு கோவத்தில் மூச்சிரைத்தது. எங்கள் மதி சார் கயமைத்தனத்தை பொறுத்துக் கொள்ளவே மாட்டார். .

தினகர் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு

“ சார்! ஒரு விஷயம். பய நம்மாளு சார்.”

“என்னய்யா சொல்ற?.’

“ஆமாம்.தரோவா விசாரிச்சிட்டேன். நம்மசாதிப் பையந்தான்.”---தினகர் குரல் சற்றேரக்குறைய கிசுகிசுப்பாயிருந்தது. மதி சார் எதுவும் பேசவில்லை.அமைதியாகி விட்டார்.

“என்ன சார்?.’

பதிலில்லை கொஞ்சநேரம் மவுனமாக நின்றார் எனக்கு அவர் செயல் புதிராய் இருந்தது.

“ சார்….சார்.”

இப்போது அவர் இரண்டு பக்கங்களிலும் பார்த்து விட்டு தணிந்த குரலில்

“ஒண்டி ஆளா இம்மா நேரம் அத்தினி பேருக்கும் சவால் குடுக்கும் போதே நெனைச்சேன். பையன் கெட்டிக்காரன்யா. இல்லே? .”---மதி சார் சிரித்தார். தினகரும் சிரித்தார்.

அடப்பாவிகளே! அப்ப எங்க மூணு பேருக்குள்ளேயும்  சாதி மறைஞ்சிருக்குது. அதிர்ச்சி. வெறுப்பு கொப்பளித்தது. ச்சே! இந்த நாட்டின் சாபக்கேடு இது.இங்கே சாதி இல்லையென்று வாய் கிழிய முழங்குகின்ற அத்தனை பேரும் பொய்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

                               *********************************************************************************
      அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி---2010 ல் தேர்வு பெற்ற கதை.




  






 .









  

Friday, December 28, 2012


                          தலைப்பு---------- ’அக்கா’
                                ஆக்கம்---------- செய்யாறு தி.தா.நாராயணன்
          கஸ்தூரி அக்கா சீரியஸாக கிடக்கிறாள் என்று செய்தி வந்தபோது, அந்த செய்தி எங்கள் தெருவில் என்னைத் தவிர ஒருத்தரிடமும் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இத்தனைக்கும் அவள் இந்தத் தெருவில்தான் பிறந்து, ஊர்ந்து, தவழ்ந்து, வளர்ந்து, பின்பு வாழ்க்கைப்பட்டு போனவள். அவளுடைய சமவயது நண்பர்கள், நண்பிகள், மூத்தவர்கள், என்னைப் போன்று ஐந்தாறு வயது இளையவர்கள், உறவுக்காரர்கள், என்று எல்லோரும் இன்னமும் இந்தத் தெருவில்தான் வசிக்கிறோம்.. தகவல் கொண்டுவந்த ஆள் இன்னமும் எங்கள் எதிரில்தான் நின்றுக் கொண்டிருக்கிறான் கஸ்தூரி அக்காவின் இரண்டு தம்பிகளுக்கும் தகவல் சொல்ல வந்தவனை தற்செயலாய் மடக்கி விசாரிக்கவும் எங்களுக்கு விஷயம் தெரிந்தது..இது கிராமம். ஒரு புதுமுகம் ஊருக்குள்ள தென்பட்டால் யாரு?, எவரு?, யாருவீட்டுக்கு?,என்ன விவகாரம்?, போன்ற விவரங்கள் கொஞ்ச நேரத்திலேயே  ஊருக்கே தெரிஞ்சி போயிடும்.
“கஸ்தூரிக்கு என்னய்யா உடம்புக்கு?.’
“ஒருமாசமா வுடாத ஜுரங்க. டெய்லி தர்மாஸ்பத்திரியில ஊசி போட்டுக்கிணுதான் இருக்குது, கேக்கல ஜன்னி கண்டுடுச்சின்றாங்க  தெரியல ராத்திரியெல்லாம்  ஒரே பெனாத்தலு.டைபாய்ட்டு ஜுரம்ன்றாங்க,, ஒரு டாக்டரு மலேரியான்றான்,ஒருத்தன் விஷ ஜுரம்ன்றான்.ஒரு டாக்டரு டிங்குஜுரம்மாதிரி தெரியுதுன்றான். த்தூ!ஒரு டாக்டரு சொல்ற மாதிரி இன்னொரு டாக்டரு சொல்றதில்லியே அது ஏங்க? எல்லாரும் அதே படிப்புதானே  படிச்சாங்க.?..” .
“ எப்பா! இவன் தோலுவாயனாட்டமிருக்கு.. யோவ்! அவ தம்பிங்களுக்கு தகவல் சொல்லிட்டியா?.”
 “அட ஏங்க!. இங்க எனுக்கு சாப்பாட்டுக்குக் கூட வழியில்லைன்னு தம்பிங்ககிட்ட சொல்லு. நான் கேட்டேன்னு ஒரு ரெண்டாயிரம் ரூபா  வாங்கிக்கிணு வான்னு சொல்லுச்சி. ஆனா இவங்க என்னடான்னா கன்னாபின்னான்னு திட்டிட்டு தலைய சுத்தி ஆளுக்கு இருநூறு ரூபா போட்டாங்க, ஈயா பங்கனுங்க. அவ மண்டையைப் போட்டப்புறம்  வந்து சொல்லு வந்து எடுத்து போட்டுட்டு வந்திட்றோம்னு ரெண்டுபேரும் தீர்த்து சொல்றாங்கப்பா. இதுமாரி தம்பிங்கள எந்த ஊரிலியும் நான்  பார்க்கலடா சாமீ!.”
சரிய்யா! கஸ்தூரிய பெத்தவங்களும் போய் சேர்ந்துட்டாங்க,கவனிக்க வேண்டிய தம்பிகளும் ஒருத்தனுக்கு ரெண்டு பேர் இங்க இருந்தும் ஒதுங்கறானுங்க. நாங்கள்லாம் வேத்து மனுஷாளுங்கய்யா..நாங்க இன்னா பண்றது?.அவளுக்கு வோணும்யா. பட்டாத்தான் புத்தி வரும்.ஹும்! இனிமே வந்து என்ன புண்ணியம்?. எவ்வளவு தூரம் எடுத்து சொன்னோம்? கேட்டாளா? அந்த துலுக்கன் பின்னால போனா இல்ல. அதான் அவன் புள்ளைய குடுத்துட்டு, கூடவே கடுக்காவும் குடுத்தான். ஹ.ஹ. ஹா. சரிசரி நீ போய்வா.”;----இது வெங்கிடேச மாமா. வந்தவன் தலையிலடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்
‘ இருப்பா! கஸ்தூரி அக்கா இருக்கிற அட்ரஸைக் குடு நான் வர்றேன்..”----அவன் கையில் போக்குவரத்து செலவுக்காக ஒரு நூறு ரூபாய் தாளை வைத்தேன்.. எல்லோரும் என்னை ஆச்சர்யமாகப் பார்த்ததை., அலட்சியப் படுத்திவிட்டு எழுந்துக் கொண்டேன். கஸ்தூரி அக்காவை நினைக்கும் போது எப்பவும் நெஞ்சில் ஏதோ ஒன்று கனமாய் வந்து அழுத்தும் அவளுடைய பளீரென்ற சிரிப்பும், கரிசனமும்தான் அக்காவின் ஸ்பெஷாலிட்டி. அக்காவின் குடும்பம் ஏழ்மையானது. அப்பா விவசாய கூலி. சொற்ப வருவாய். இதில் இரண்டு பெண்கள், இரண்டு பிள்ளைகள். அக்கா மட்டும் அவருடைய முதல் தாரத்தின் மகள் ஆகும். முதல் மனைவி இறந்துபோக, அடுத்து வந்த இரண்டாவது தாரத்தின் பிள்ளைகள்தான் மற்ற மூவரும்.
              சாயங்கால நேரங்களில் அவள் தம்பிகளுக்கும், எங்கள் தெருவிலிருக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் ஊர் கூத்து மேடையில் வைத்து பாடம் சொல்லிக் குடுப்பாள். அதற்கு ஃபீஸ் என்று எதையும் கேட்டதில்லை.. பெற்றவர்களே பார்த்து கொடுப்பதை வாங்கிக் கொள்வாள். இல்லையென்றாலும் ஒன்றும் சொல்லமாட்டாள். எனக்குத்தெரிந்து நாலைந்து பேர் காசு இல்லாமல்தான் படித்தார்கள். நன்றாக சொல்லிக் கொடுப்பாள்.சொல்லப் போனால் எனக்கு எட்டாம் வகுப்பில் அல்ஜிப்ராவும், ஒன்பதாம் வகுப்பில் ட்ரிக்னாமெட்ரியும் அக்கா சொல்லிக் கொடுத்ததில்தான் விளங்கியது. அவள் என்ன படித்திருக்கிறாள்?, என்று தெரியாது.ஆனால் ஆங்கிலம்,கணக்கு, தமிழ் அறிவியல் என்று எல்லா பாடங்களையும் சொல்லித் தருவாள். நான் பத்தாம்வகுப்பு முடித்துவிட்டு ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் போதுதான் அக்காவுக்கு கல்யாணம் நிச்சயமாயிற்று.அவள் அப்பா தேடித் தேடி சற்றும் பொருத்தமில்லாமல் ஒரு மாப்பிள்ளையை பிடித்து வந்தார். ஒற்றைநாடியாய்,குள்ளமாய், கன்னங்கரேலென்று. அக்கா நல்ல உயரம், நல்லசிகப்பு., அழகாய் இருப்பாள். தெருவே அதைப் பற்றி பேசி தீர்த்தது.
“தங்க விக்கிரகமாட்டம் பொண்ணுக்கு என்ன மாதிரி  மாப்பிள்ளையை புடிச்சாம் பார்றா, கரிச்சட்டியாட்டம்..”---இது மேலத்தெரு கோபால். அக்கா எவ்வித மறுப்பும் சொல்லவில்லை. எனக்குத் தெரியும் அக்காவைத் திட்டித் திட்டி ஒத்துக்க வெச்சிருப்பாங்க.. வரதட்சணை போட்டு கட்டிக் கொடுக்க ஐவேஜு இல்லாத குடும்பம், என்ன பண்ணமுடியும்?.சிலநாள் தனிமையில் அவள் அழுததை நான் பார்த்தேன். கல்யாணத்திற்கு எல்லோரும் போயிருந்தோம் விமரிசையாக நடந்தது. பிள்ளை வீடு நல்ல வசதி. போலிருக்கு. கழுத்தில் புதுத்தாலி மின்ன, முகத்தில் வரவழித்துக் கொண்ட சந்தோஷத்துடன், கணவனுடன் சென்றாள்., என்னாயிற்றோ தெரியவில்லை ஆறு மாசத்திற்குள் எங்கள் தெருவுக்கே புருஷனுடன் குடி வந்துவிட்டாள். போன இடத்தில் அவள் புருஷன் செய்து வந்த வியாபாரத்தில் பெரும் நஷ்டம் என்று அக்கா சொன்னாள்..
               எங்களூரிலிருந்து மூணு கிலோமீட்டர் தூரத்தில் போளுர் டவுன். அங்கே சின்னதாய் ஒரு சிற்றுண்டி கடை ஆரம்பித்தார்கள். கல்லாவில் அக்கா உட்கார, வீட்டுக்காரர் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டார். பலகாரங்களின் சுவையோ, இவர்களின் நல்ல நேரமோ?,அல்லது அக்காவின் ஆளுமையோ கொஞ்ச நாளில் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மக்களின் இயல்புகளை அறிந்தவளாக  தோசையில் மட்டும் நாலு வெரைட்டிகள், ஆப்பத்தில் நான்கு ரகங்கள், இட்லியில் கூட மூன்று விதங்கள் என்று பலகாரத் தயாரிப்பில் புதுப்புது டெக்னிக்குகளை அக்கா புகுத்தினாள். சிட்டியிலிருந்து சரக்குமாஸ்டர்களை வேலைக்கு வைத்தாள். சைட்டிஷ்களை சிக்கனம் பார்க்காமல் வாரிவிடச் சொன்னாள்.  வட இந்திய உணவு தயாரிப்பு ரெஸிப்பிகளை தேடிப்பிடித்து மெனு லிஸ்ட்டில் சேர்த்தாள். எங்கள் ஹோட்டலின் ஸ்பெஷல் என்று சில ஐட்டங்களை விளம்பரப்படுத்தினாள்.காலை பத்தரை மணிக்கு மேலே போனால்  டிபன் கிடைக்காது,  மாலை ஆறு மணிக்கு மேலே மாலநேர  டிபன் ஐட்டங்கள் எதுவும் கிடைக்காது என்று வியாபாரத்தில் ஒரு பரபரப்பை வைத்தாள். அதே சமயம் உணவின் தரத்தை சிறப்பாக நிர்வகித்தாள். சர்வர்களை யூனிஃபார்ம் ட்ரெஸ்ஸில் நடமாட வைத்து, ஹோட்டல் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாள். பாத்திரங்களெல்லாம் கொதிக்கும் நீரில் கழுவப்பட்டன. விளைவு?.மற்ற ஹோட்டல்காரர்கள் வாயைப் பிளக்க, வியாபாரம் பிய்த்துக் கொண்டு போனது..கனவு போல் ரொம்ப சீக்கிரத்திலேயே அது பெரிய ஹோட்டலாக விரிவடைந்தது..
             எல்லாம் அக்காவின் ராசி என்று பேசிக்கொண்டார்கள். அக்கா பூரிப்புடன் பொற்குவியலாய் சரஞ்சரமாய் நகைகளுடன் வளைய வந்தாள். எடுபிடி ஆட்கள், பெரிய வீடு, கார் என்று வசதி பெருகியது. அக்காவின் குடும்பமே இவளால் பிழைத்தது, உயர்வடைந்தது. தங்கை செல்விக்கு அக்காதான் கல்யாணம் செய்து வைத்தாள். அரசு கல்லூரியில் பி.எஸ்.ஸி முடித்திருந்த  தம்பிகள் இருவரையும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதவைத்து, லட்சங்களை லஞ்சமாகக் இறைத்து தேர்ச்சி பெற வைத்தாள். மொத்தத்தில் அந்த குடும்பத்தை அக்கா ஸ்வீகரித்துக் கொண்டாள். இந்தத் தெருவில் பல குடும்பங்களுக்கு விளம்பரமின்றி உதவி செய்திருக்கிறாள். ஏன் எங்கள் குடும்பம்கூட ஏதோ ஓரிரு சமயங்களிலே அதில் குளிர்காய்ந்த குடும்பம்தான். எல்லாவற்றையும்  இந்த தெரு பார்த்துக் கொண்டுதான் இருந்தது.  அப்படி அவள் தயவில் மேலே வந்த தம்பிகள்தான் இன்றைக்கு அவள் செத்த பிறகு தகவல் சொல்லுன்னு சொல்கிறார்கள். சே! அப்படி அவள் எந்த பெரிய தவறையுந்தான் செய்திருக்கட்டுமே.
                 எனக்கும் அக்காவுக்குமான உணர்வுகள் பிரத்தியேகமானவை.. நான் அவளுக்கு சொந்தமும் இல்லை, அவளுடைய இனத்தைச் சேர்ந்தவனும் இல்லை. நாலாவது வீட்டுக்காரன். நான் நன்றாக படிப்பவன் என்பதால், எனக்கு ஸ்பெஷலாய் சொல்லிக் கொடுப்பாள். நல்ல மார்க் எடுக்கும்போதெல்லாம் என் தம்பி கெட்டிக்கார தம்பீன்னு.. பாசமாய் தட்டிக் கொடுத்து சந்தோஷப்படுவாள்.  அவளுடைய அந்த ஏழ்மையிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் போதெல்லாம் அவளிடமிருந்து எனக்கு பரிசுகள் கிடைக்கும். ஸ்வீட், பேனா, ஸ்கெட்ச்பென், செட், இப்படி…,நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன்  
நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்போது ஒவ்வொரு நாளும் நான் பரீட்சை ஹாலை விட்டு வெளியே வரும்போது வெளியே காத்திருப்பாள். அங்கேயே ஒவ்வொரு கேள்விக்கும் பதில் என்ன எழுதினேன், எப்படி எழுதினேன். எவ்வளவு மார்க் வரும்?.மொத்தத்தையும் அங்கேயே முடித்து விடுவாள். யாருக்கு வரும் இந்த குணம்?.அவ்வளவு அர்ப்பணிப்புகளோடு செய்வாள். இப்படி நான் படிக்கிற காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் அக்கா அவளுடைய சொந்தத் தம்பிகளை விட அதிகமாக என்னை ஊக்குவித்திருக்கிறாள். .
                நான் பி.இ. இறுதியாண்டு  படிக்கும்போதுதான் அவள் வாழ்க்கையில் அந்த  பெரிய  சரிவு ஏற்பட்டது.. சரியான திட்டமிடுதலுடன் பணக்காரியாய், பரோபகாரியாய் வாழ்ந்துவந்த அவள் வாழ்க்கை திடீரென்று திசை மாறியது. அவள் புருஷன் ஏற்கனவே குடிகாரர்.. கள்ளநோட்டு விவகாரத்தில். ஒன்றுக்கு மூன்று தருகிறார்கள் என்று பேராசையுடன் அங்கங்கே தகுதிக்கு மீறி கடன் வாங்கி பெருந்தொகையைத் திரட்டிக் கொண்டுபோய்  பறிகொடுத்துவிட்டு, உதை வாங்கிக் கொண்டு வந்தார். எல்லா இருப்புகளும் காலி. பெரும் கடனாளியாகி, சீக்கிரத்திலேயே ஹோட்டல் நடத்த முடியாத நிலையில், அதை இழுத்து மூடவேண்டியதாயிற்று. காரை ஃபைனான்ஸ்காரன் ஓட்டிக் கொண்டு போய்விட்டான் .நகைகளையெல்லாம்  விற்று கடன்களை அடைத்தார்கள்.வாஸ்து பார்த்து, வீட்டின் காற்றோட்டம், வெளிச்சம், சேஃப்டி என்று பார்த்துப் பார்த்து வாங்கிய வீடு ஏலத்தில் போயிற்று. பாவி! அவ்வளவு பெரிய தொகையை கடன் வாங்கி நோட்டு மாற்றுவதில் பறி கொடுத்திருக்கிறான். நாடகத்தின் அடுத்த காட்சிபோல எல்லா செல்வ செழிப்புகளும் ஒரேநாளில் மறைந்து போக, வாழ்க்கையின் அநித்தியம் உறைத்தது. ’தீதும் நன்றும் பிறர்தர வாரா’—வாழ்க்கையை ஒற்றை வரியில் விமர்சித்த சொற்றொடர் இது. என் அப்பா சொல்லுவார் ஒருவனுக்கு செல்வம் சேருவதென்பது சினிமா தியேட்டரில் படம் ஆரம்பிக்கும் போது கூட்டம் சேருவது போலவாம். ஒவ்வொன்றாய் வந்து சேருமாம். செல்வம் நம்மை விட்டு போவதென்பது படம் முடிந்து மக்கள் வெளியேறுவது போலவாம் குபீரென்று போய்விடுமாம். அக்கா விஷயத்தில் அது அப்படியே பலித்து விட்டது..
                 கொஞ்சநாளில் அவள் புருஷன் மிதமிஞ்சிய குடியில் ராத்திரி படுக்கையிலேயே செத்துக் கிடந்தார்.. அடுத்த அடி இது. பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்.நொடியில் வாழ்க்கை கவிழ்ந்து போயிற்று. உறவுகள் எல்லாம் அடித்துக் கொண்டு அழுதன. அக்கா அழவில்லை. அதிர்ச்சி என்று தெரு சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் அப்புறந்தான் தெரிந்தது, இல்லை விடுதலை. அக்கா புருஷன் ஒரு நபும்சகன், ஆரோக்கியமான ஆண்மை இல்லாதவர். அதை வெளிக்காட்டாமல் தன் பிறந்த வீட்டு மக்களின் சந்தோஷத்துக்காக விருதாவான  ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறாள். இப்படிகூட யாராவது இருப்பார்களா?. இருந்தாள், அக்கா இருந்தாள். எட்டு வருஷங்கள் அவருடன் உப்புசப்பில்லாமல் ஒப்புக்கு வாழ்ந்திருக்கிறாள்.
               அதனால்தான் அவள் புருஷன் அக்காவை அப்படி தாங்கினார் போல.  மனைவியை அடித்து உதைத்து கொடுமைப் படுத்தும் முரடன்கள் கூட சின்னப் பெண்களை இரண்டாம் கல்யாணம் கட்டிக் கொள்ளும்போது பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவதும், பெண்டாட்டிக்காக  பணத்தை வாரி இறைப்பதும், அவளுக்குப் பணிந்து பணிவிடை செய்வதும் எல்லாம் தன் குறையை சரிக்கட்டுவது போலத்தான் என்பதைப் போல , அக்கா பணத்தை தண்ணீராய் செலவு பண்ணியதற்கும் அவர் எவ்வித தடையும் சொல்லாமல் இருந்திருக்கிறார்..  இந்த ரகசியம் எனக்கு மட்டுமே தெரியு.ம். லீவில் நான் வீட்டிற்கு வந்தபோது அக்கா வெளியே சொல்லக்கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு, மேலே சொன்னவைகளை சொல்லிவிட்டு அப்படி அழுதாள்..ஐயோ அக்கா நீ எந்த ரகத்தில் சேர்த்தி?. புத்திசாலியா?, அல்லது ஊரார் சொல்வதுபோல வெகுளியா?.
”தம்பீ! அவராலதான் நல்ல சாப்பாடுகூட கிடைக்காமலிருந்த  எங்க குடும்பம் இன்னைக்கு நல்லா இருக்கு. அதுக்கு இதுதான் விலைன்னு நெனைச்சிக்கிறேன். இறந்து போன மனுஷனை குத்திக் கிளறி அசிங்கப் படுத்துறதில யாருக்கு என்ன லாபம் சொல்லு..”
“த்சு!  அக்கா! ஒரு சிலருக்கு வாழ்க்கை எப்பவும் தெளிந்த நீரோடை மாதிரி, தென்றலாய்  கடந்து போயிட்றது. சிலருக்கு அது எப்பவும் போராட்டமாகவே ஆயிட்றது..”
“என்ன பண்றது தம்பீ?,  சிப்பாயாக பொறப்பெடுத்தா, எப்பவும் சண்டைபோட்டுக்கிட்டேதான் இருக்கணும்..அதான் சிப்பாயின் லட்சணம்னு எங்கப்பா சொல்லுவாரு. நானும் அப்படி பொறப்பெடுத்திருக்கேனோ என்னவோ?...”----சொல்லிவிட்டு சிரிக்கிறாள். இந்த மனசு அக்காவுக்குத்தான் வரும்.
                அடுத்த வருஷம் நான் டெல்லியில் எம்.பி.ஏ. வில் சேர்ந்ததும், படிப்பு முடிந்து பூனாவில் விப்ரோவில் பணியில் சேர்ந்து கைநிறைய சம்பாதிக்கிறேன் என்பதும், அங்கே மூன்று வருஷங்கள் வேலை செய்துவிட்டு, தாய் மாநிலம் தேடி சென்னையில் டி.சி.எஸ்.ஸில் சேரப் போகிறேன் என்பதும். அதற்கு  முன்பாக ஒரு பத்து நாள் ஓய்வுக்காக வீட்டிற்கு வந்திருக்கிறேன் என்பதுவும் என்னைப் பற்றிய நேற்றுவரையிலான சுருக்கமான என் வரலாற்று செய்திகள்.. இடையில் ஒருமுறை பொங்கலுக்கு வந்திருந்த போது அக்காவைப் போய் பார்த்தேன். அப்படி மாறிப் போயிருந்தாள். அந்த சிரிப்பும், வாடா தம்பீ! என்று வாஞ்சையாய் முதுகைத் தட்டிக் கொடுக்கும்  அன்னியோன்னியமும் இப்போதில்லை. வறுமை வரும்போது கூச்சமும் வந்துவிடும் என்பது உண்மைதான். அக்காவிடம் பார்க்கிறேன்.  ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்கிறாளாம். தம்பிகள் யாரும் இங்கே இல்லை. சென்னையில் வேலை செய்கிறார்களாம். அவர்கள் ஏதாவது உதவி செய்கிறார்களா? என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் வேறு பேச்சுக்கு மாறிவிட்டாள்.
“அக்கா! நீ வேற கல்யாணம் பண்ணிக்கோக்கா. அதாங்கா உனக்கு நல்லது. உத்தமியா இருந்தாக்கூட விதவைன்னா ஊர் ஆயிரம் புறணி பேசுங்க்கா. வேற ஒருத்தியா இருந்தா உனக்கு ஏற்பட்ட இந்த  வாழ்க்கைக்கு எப்பவோ வேற ஒருத்தனை தேடிக்கிட்டு இருப்பாங்க. ஆமாம்..’
“டேய்! பெரிய மனுஷா போயிட்டு வாடா..”------ கிளம்பும் போது வற்புறுத்தி அவள் கையில் ஆயிரம் ரூபாய் தாள்கள் ஐந்தை வைத்துவிட்டு கிளம்பினேன். அடுத்த பொங்கலுக்கு வந்தபோது அக்கா இல்லை. யாரோ ஒரு துலுக்கனுடன் ஓடிவிட்ட தகவல் அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.., வெங்கிடேச மாமா எரிச்சலுடன் சொன்னார். ஊரே காரி துப்பியது. இன்னும் சிலருடன் கூட தவறான உறவு உண்டுன்னு கதை கட்டினார்கள். அப்படி இருக்க வேண்டும் என்பது இவர்களின் அரிப்பு, வக்கிரம். அவள் ஒரு முஸ்லீமை விரும்பி இணைந்தது அவ்வளவு பெரிய குற்றமா?. இவர்களெல்லாம் எந்த யுகத்தில் வாழ்கிறார்கள்?. இந்த வாழ்க்கையாவது அவளுக்கு நல்லபடி அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். அக்காவின் இந்த துணிச்சல் ஒரு பக்கம் எனக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது. நசை வேகம் என்கிறார்களே அது இதுதானா?. எட்டு வருஷங்கள் ஒரு துறவியாய்  வாழ்ந்தவளுக்கு, ஒரு நொடியில் ஒருத்தனை நம்பி எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு மதம் மாறி வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் துணிச்சலும் வந்திருக்கிறதே. .
              அதற்கடுத்த வருஷம் வந்தபோது அக்கா நம்பிப் போன அந்த முஸ்லீம் அவளை விட்டுட்டு ஓடிப் போய் விட்டானாம். ஐயோ! அக்கா.நீ நிஜமாகவே சிப்பாய் பொறப்புதானா?. முத்துமாமா அந்த விஷயத்தை குரூரமாய் சிரித்துக் கொண்டு  சொன்னார். இவரும், ஊரிலிருக்கும் சில ஆட்களும். ஒரு நேரம் அக்காவிடம் தவறாக நடக்க முயற்சித்து அவளிடம் செருப்படி வாங்கியவர்கள்.தான். ஹும்! எல்லா சமயங்களிலும் பெரும்பாலான ஆண்கள் எப்போதும் பெண்கள் விஷயங்களில் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக இருப்பதில்லை.
“இப்ப கோயம்பத்தூர் பக்கம் எங்கியோ பணக்கார வீட்டுப்  பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் ஆயா  வேலை செய்து வயித்தை கழுவுகிறாளாம். துலுக்கனுக்கு பொறந்தது ஒரு பொண்ணு. அது அவ கூடத்தான்  இருக்காம்.. அவ்வளவுதாம்பா தெரியும்.”----என்றார் முத்துமாமா
அதற்கப்புறம் வந்தபோதெல்லாம் எதுவும் செய்தி இல்லை. அந்தப் பெண் குழந்தையும், ஆயா வேலையும்தான் இனி அவள் வாழ்க்கை என்பதுடன் அவள் குடும்பமும், இந்தத் தெருவும் அவளை மறந்து விட்டன. பாவம் அக்கா. அவளுடைய புத்திசாலித்தனத்திற்கு எந்த வேலை செய்தாலும் நெம்பர் ஒன்னாக வருவாள். ஹோட்டலை என்ன திறமையாக நடத்தினாள்?.ஆனால் பணம் இல்லாமல் என்ன செய்யமுடியும்?. . பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.  .
                   காலை எட்டு மணிக்கெல்லாம் நெற்குன்றம் போய் இறங்கினேன். ஆனி கருக்கு இருட்டிக் கொண்டு லேசாய் கொசுத்தூறல் போட்டுக் கொண்டிருந்தது. அக்கா இந்த ஏரியாவில்தான் தற்போது இருப்பதாக  வந்தவன் அட்ரஸ் கொடுத்திருந்தான்.. அவனிடம் அட்ரஸ் வாங்கி ஐந்து நாட்களுக்கப்புறந்தான் என்னால் வரமுடிந்தது. .ஒரு முஸ்லீமுடன் வாழ போனதற்கப்புறம் இப்போதுதான் அவளை பார்க்கப் போகிறேன். வாழ்க்கையைத் தேடிப் போய் தோற்றதினால் சங்கடப் படுவாள். எப்படியும் அவளை கூட்டிப்போய் ஒரு நர்சிங்ஹோமில் சேர்த்து வைத்தியம் பார்க்கும் முடிவுடன் தான் வந்திருக்கிறேன், அக்காவுக்கு செய்யும் காணிக்கையாக மதிக்கிறேன். நெம்பர்—8, பிள்ளையார் கோவில் தெரு. விசாரித்துக் கொண்டு சென்றேன்.. முருங்கை மரத்து வீடு என்றானே அந்த ஆளு. அந்தத் தெருவில் நாலைந்து வீடுகளின் முன்பு முருங்கை மரம் இருந்தது. எதிரிலிருந்த கடையில் விசாரித்தேன்.
”இங்க கஸ்தூரின்னு ஒருத்தர்.” -------கடைக்காரன் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, அதோஅந்த  முருங்கை மரத்து வூடு. ஒலைகுடிசை கீதே அதான்.”
               வெளியே ஒரு வயதான பொம்பளை உட்கார்ந்திருந்து மல்லிகைப்பூ தொடுத்துக் கொண்டிருந்தாள்.
“ஏம்மா! இங்க கஸ்தூரின்னு…’----- என்னை உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே எழுந்து போனாள்.
“அடியே கஸ்தூரி! உன்னை தேடி யாரோ வந்திருக்காங்கடீ.”
உள்ளே ஒரு பெண் குரல் ஐயோ!…அம்மா! என்று முனகும் சத்தம் கேட்கிறது.அது அக்காவின் குரல்தான்.
“ஆ…எம்மா…எப்பா…அக்கா! முடியலக்கா. .மூணு நாளா ஒரு பருக்கை தொண்டையில எறங்கல..ஐயோ! தலை வெடிச்சிப் போவுதுக்கா.”
“சரிடீ! அந்த ஆளு வெளியே காத்துங்கீறாங்கடீ. எழுந்திரு. இந்தா இந்த டீயை குடிச்சிட்டுப் போய் பாரு..”
“அக்கா! அதோ மாடத்தில ஜுர மாத்திரை இருக்குது பாரு அதை கொஞ்சம் எடு, போட்டுக்கிணு போறேன். எம்மா!.”-----
அக்கா! தேவதையே! தேவதைகள் கூட சில காலம் சாப விமோசனத்துக்காக இந்த பூவுலகில் பிறந்து, அல்லல்பட்டு, சீரழிந்து சாபநிவர்த்தியாகி, பின்னர் சொர்க்கம் போய் சேருவார்களாமே, நீ எந்த சாபநிவர்த்திக்காக இந்த பூமியில் பிறந்து இப்படி அல்லல் படுகிறாயோ?.
இப்போது அந்த பெண்மணி என்னை உள்ளே கூட்டிச் சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் ஸ்டூலில் உட்கார வைத்தாள். ,வருவாங்க இருங்க என்று சொல்லிவிட்டு தெருத் திண்ணைக்குப்  போய் விட்டாள். உள்ளே  இருட்டாயிருந்தது. மின்வசதியில்லாத வீடு.  வெளியே தூறல் சற்று வலுத்திருந்தது.. எனக்கு மனசு ஒரு நிலையில் இல்லை. வாழ்க்கை மனிதர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டு விடுகிறது?. ஏழ்மையில் பிறந்திருந்தாலும், இடையில் கார், பங்களா,ஏவல், எடுபிடி என்று அந்தஸ்துடன் வாழ்ந்தவள். இன்றைக்கு இங்கே யாருமில்லா அனாதையாய்…..,என்னைப் பார்த்துவிட்டு  தன் நிலைக்காக எப்படி அழுவாளோ? என்றிருந்தது.
“யாரு?. வாங்க!. ”
அக்காவா இது?.அக்காவேதான். கறுகறுத்து, இளைத்துப்போய் கிழிந்த நாராய் இருந்தாள்.. தலைமுடியை சேர்த்து அள்ளி கொண்டை முடிந்துக் கொண்டே கிட்டே வந்தவள் இருட்டில் என்னை தெரிந்துக் கொள்ளாமலேயே மேல் முந்தானையை எடுத்து கீழே போட்டுவிட்டு வாங்க உள்ளே போயிடலாம் என்று என் கையைப் பிடித்தாள்..
சத்தமின்றி அழ ஆரம்பித்தேன்.      
                                       ****************************************************               
                   

         
              

Thursday, December 27, 2012



                                                               தலைப்பு  ---------------- ’சாலையோரத்து மரம்’
                        .
           அது ஒரு நீண்ட மினி ஹால் மாதிரியான அறை.. உள்ளே நுழைந்தவுடன் ஜிவ்வென்று கவ்வும் ஏ.ஸி.யின் குளிர்...அதையுந்தாண்டி மூக்கில் உறைக்கும்  சேவ்லான் நெடி.வரிசையாய் கட்டில்களில் பல நிலைகளில் அபாய கட்டங்களில் நோயாளிகள். சிலர் ஆக்ஸிஜன் மாஸ்க் வைத்த பின்பும் மூச்சுத் திணறலுடன் கிடந்தார்கள்.அதில் சிலருக்கு  கோமா மயக்க நிலை. சொல்லி வைத்தாற்போல அல்லது யூனிஃபார்ம் போல எல்லாருக்கும் தலையில் பெரிய கட்டு.  இதுதான் சென்னை பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை.யின் ஐ.ஸி..யூ. இண்டென்சிவ் கேர் யூனிட்.எந்த நேரமும் பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கும் டாக்டர்களும்,நர்ஸ்களும், தியேட்டர் அஸிஸ்டண்ட்களும் இந்த தளத்தில் தான்.,பீதிக் கூச்சல்களும்,அழுகைகளும், சிரிப்புகளும் கூட இந்தத் தளத்தில் தான். ஐ.சி.யூ.வை ஒட்டி விரிந்துச் செல்லும் அந்த நீண்ட ஹாலில் சேர்களில் மனிதர்கள்…மனிதர்கள்…வரமாட்டேன் என்று உள்ளே எமனுடன் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் உறவுகள், ஓயாமல் சொந்தக் கதைகளையும், புறணிக் கதைகளையும் பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் சற்று நேரத்தில் கையில் லிஸ்ட்டுடன் நர்ஸ் புஷ்பா வரப் போகிறாள்..வார்டுபாய் ஆறுமுகம் அதை நோட்டீஸ் போர்டில் ஒட்டப் போகிறான். ராத்திரி சிவலோக பதவி / வைகுண்ட பதவி / மோட்சம், அடைந்து விட்டவர்களின் பட்டியல் அது. உடனே ஒரு கும்பல் குய்யோ முறையோ என்று கதறிக் கொண்டு மார்ச்சுவரி பக்கம் ஓடும். அப்புறம் காலியாகிவிட்ட இருக்கைகளை நிரப்ப வேறொரு கும்பல் வந்து சேரும். பழையன கழிதலும், புதியன புகுதலும் . இயற்கையின் தத்துவம் ஜரூராக அரங்கேறும் களம் இது. .
             வலது பக்க வரிசையில் மூன்றாவது கட்டிலில் அவன், அந்தப் பையன் கிடத்தப் பட்டிருந்தான். இந்தக் கதையின் நாயகன். கோமா நிலை என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. நல்ல சிகப்பு, ஒல்லி தேகம்,தெற்றுப்பல், நீளமாய் வளர்த்து வைத்திருக்கும் பரட்டைத் தலை.. தலையில் பெரியதாய் கட்டு போடப் பட்டிருந்தது. கையில்  சொட்டுச் சொட்டாய் ரிங்கர்ஸ் லேக்டேட் திரவம் இறங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்க்ரீனில் மினுக்கியபடி இ ஸி ஜி. மானிட்டர் கோடு போட்டுக் கொண்டிருக்கிறது. பக்கத்தில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர். அது , நாடித் துடிப்பு  குறைவாக இருப்பதாக எச்சரித்துக் கொண்டிருக்கிறது
                 சென்னையில்  ஒரு நகைக் கடை அதிபரின் ஒரே பையன். அளவற்ற கோடிகளுக்கு ஒரே வாரிசு. மாநிலக் கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு. மாநில அளவில் தெரிந்த கிரிக்கெட் ப்ளேயர். அடுத்ததாக டாப் டென் காலேஜ்களில் ஒன்றில் எம்.பி..ஏ படிக்க வைக்க கனவிருந்தது, அவன் அப்பாவிற்கு. .அதற்குள் காதல் தோல்வி.எதையும் யோசிக்கவில்லை, வயசுக் கோளாறு. நேராய் வீட்டிற்கு வந்திருக்கிறான். அப்பாவின் அறை, அலமாரியில் ரிவால்வர், லோடட். எடுத்தான் லாக்கை ரிலீஸ் பண்ணி, தலையின் பக்கவாட்டில் வைத்து, ட்ரிகரைத் தொட, .டுமீல்….வயசான பெற்றோர்களின் அன்பை, எதிர்பார்ப்பை, கனவுகளை, எல்லாவற்றையும்  அலட்சியப் படுத்திவிட்ட  இந்த பாழாய் போன காதல் சாகட்டும்..மருத்துவமனைக்கு வெளியே நகைக் கடை ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் ,உறவினர்களும்,பையனுடைய கல்லூரி மாணவர்களும், என்று பெருங் கூட்டம் கூடியிருந்தது. ஒரே கூச்சலும், அழுகையும்.இரண்டு கான்ஸ்டபிள்கள் கூட்டத்தை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
                  டாக்டர்.ஆதித்யன், அஸிஸ்டண்ட் ஒருத்தருடன் சி.டி. ஸ்கேன் ஒன்றை தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.. இவர்தான் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் தலைமை மருத்துவர். உடனிருக்கும் அஸிஸ்டண்ட்கள் டாக்டர். டேனியல்,டாக்டர். குமார். ஆதித்யன் அந்தப் பையனின் அருகில் வந்து கண்களைப் பிதுக்கிப் பார்த்தார். இ சி ஜி மானிட்டரையும், பல்ஸ் ஆக்ஸிமீட்டரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“டேனியல்! க்விக்! பேஷ்ண்ட்கண்டிஷன்  ஈஸ் கிரிட்டிக்கிள். ஓ.டி.க்கு தூக்கு. க்விக்.அனஸ்தட்டிஸ்ட்டை அலர்ட் பண்ணு..”----பேசியபடி திரும்பியவர், நகைக் கடை அதிபரும், அவர் மனைவியும் கண்கலங்கி நிற்பதைப் பார்த்தார்.
“டாக்டர் சார்! ஒரே பிள்ளை சார். இவனை விட்டால் எங்களுக்கு வேற…”----அழ ஆரம்பித்தார்கள்.
“உள்ளே எதுக்கு வந்தீங்க?. பர்மிஷன் இல்லாம எப்படி வந்தீங்க? யார் அலவ் பண்ணது?.ப்ளீஸ் வெளியே போங்க.. குமார்! என்ன இதெல்லாம்?.செக்யூரிட்டி எங்கே?. யூஸ்லெஸ். பைசா வாங்கிட்டு உள்ள விட்டிருப்பான்..”
“டாக்டர்! ப்ளீஸ்!. எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்ல டாக்டர். உங்க திறமைக்காகத்தான் அப்போலோ போவாம இங்க கொண்டாந்தேன் டாக்டர். ஐயோ !கடவுளே!.”--- பளார் பளாரென்று தன் முகத்தில் அறைந்துக் கொண்டு அழுதார். அந்த அம்மாவுக்கு உன்மத்த நிலை, சூன்யத்தில் வெறித்துக் கொண்டிருந்தார்.. டாக்டர் கடுகடுவென முறைத்தார்.
“” பாருங்க! பத்து நிமிஷத்துக்குள்ள இவன் தலையைத் திறந்து உள்ளே உறைந்திருக்கிற ரத்தத்தை வெளியேத்தணும். இல்லையோ நேரா மார்ச்சுவரிக்குத்தான் போவான்... அப்புறமா என் ரூமுக்கு வாங்க நிதானமா பேசலாம்.. இப்ப தொந்திரவு பண்ணாதீங்....ஓ! டேனியல்! ரெஸ்பிரேட்டரி ஃபெய்ல்யூர் வந்திட்டது பார். என்ன பண்ற?ஓடு. தியேட்டருக்குத் தூக்கு க்விக் வெண்ட்டிலேட்டர் போடு. ஓடு.  க்விக்.”
வெண்ட்டிலேட்டர் என்ற உபகரணம் மனிதனுக்கு சுவாசம் செயலிழக்கும் போது செயற்கையாக சுவாசிப்பதை செய்யும் கருவியாகும்.
“சிஸ்டர்!...சிஸ்டர்!...”---டாக்டர்.ஆதித்யன் கத்திக் கொண்டே அவ்வளவு பெரிய உடம்பை தூ   க்கி கொண்டு ஆபரேஷன் தியேட்டரை நோக்கி ஓட ஆரம்பித்தார் அந்தப் பையனுக்கு சுவாசம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டே வர, மார்புக் குழியிலிருந்து அடி வயிறு வரைக்கும் எழும்பியடிக்கும் அயோர்ட்டாவின் துடிப்பு, கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கிக் கொண்டே வருகிறது. ஒரு பெரிய கட்டடத்தில் ஒவ்வொரு விளக்காக அணைந்துக் கொண்டே வருவது போல. பார்த்துக் கொண்டிருக்கும் போதே நீண்ட கேவல் மாதிரி ஒரு பெரு மூச்சு எழுந்து, அடுத்து அதுவும் ரிதமில்லாமல் தடுமாற, கண்கள் ஒரு நிமிஷம் இடவலமாக அலைந்து,பின்பு மேலே செருகிக் கொண்டன. தலை தொங்கிவிட்டது. அந்த தம்பதிகள் ஓ! வென்று கூச்சல் போட, தியேட்டர் அஸிஸ்டண்ட்கள் அவர்களை வெளியே இழுத்துச் சென்றார்கள்.
                 பச்சை நிற சீருடை ஆட்கள் தமதமவென்று ஓடி வந்து, அவனைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் போட்டுக் கொண்டு ஓட,கூடவே கையில் இறங்கிக் கொண்டிருக்கும் திரவ பாட்டிலை தூக்கிப் பிடித்தபடி நர்ஸ் சுவாதி. ஆபரேஷன் தியேட்டரில் வைத்து வெண்ட்டிலேட்டர் போட்டு, சுவாசத்தை சீர்படுத்த அரைமணி நேரம் ஆயிற்று.. ஆக்சிஜன் அளவு கூட்டப் பட்டது. காத்திருந்தார்கள். நிலைமை சீராக ஆரம்பித்தது. அனஸ்தட்டிஸ்ட் ராமன் மயக்கமருந்து கொடுக்கும் முஸ்தீபுகளிலிருந்தார்.
                  இப்போது ஆபரேஷன் டேபிளைச் சுற்றி கருவிகள் குவிக்கப் பட்டிருந்தன. வெண்ட்டிலேட்டர்,பாயில்ஸ் அபரேட்டஸ்,இடப்புறம் பி.பி. மானிட்டர், இ.சி.ஜி. மானிட்டர், மைக்ராஸ்கோப், இத்தியாதிகள். அவன் உடைகள் உருவப்பட்டு, வேறு துணியால் மூடப் பட்டான்.அவசரடியாய் அங்கேயே வைத்து பரட்டைத் தலையை மழித்தெடுத்தார்கள். பிறகு கிருமி நாசினியால் தலையை சுத்தமாய் கழுவித் துடைத்து, அடுத்து ஸ்பிரிட்டால் சுத்தப் படுத்தினார்கள். ஆபரேஷன் டேபிள் மீது அவனை கிடத்தும் போது டாக்டர்கள் குழு கையுறைகளுடன் தயாராய் வந்து நின்றது. அனஸ்தட்டிஸ்ட் பதறினார்.  “டாக்டர்! பல்ஸ் டவுன் ஆயிட்டிருக்கு..”
“ஓ! காட்!”.-----ஆதித்யன் செக் பண்ண எஸ்! ஐம்பதுக்குக் கீழே போயாச்சு, பலவீனமான துடிப்பு.. இன்னும் கொஞ்ச நேரத்தில் பல்ஸ்பிராடியாக மாறும் நிலை.அதாவது இதயம் லப் டப் ரிதத்திலிருந்து இறங்கி படபட அதிர்வுகளாக மாறும் நிலை. இ.சி.ஜி. தடுமாறிக் கொண்டிருக்கிறது. விட்டால் பத்து நிமிடம் கூட தாங்காது.கடவுளே! என்ன செய்யப் போகிறேன்?.இந்தப் பையன் தன் கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் தெளிவாக அவருக்குத் தெரிகிறது.. வெளியே கத்திக் கொண்டிருக்கும் வயசான அந்தத் தம்பதிகள் மனசில் வந்துப் போனார்கள்.அவர்கள் ஓடிஓடி சேர்த்த பணத்துக்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் போகப் போகிறது. எல்லோரும் இவருடைய உத்திரவுக்குக் காத்திருக்கிறார்கள். வேண்டாம் டென்ஷன் கூடாது.அவர் நெற்றியில், கன்னங்களில் வழிந்த வியர்வையை நர்ஸ் அம்புஜா டவலால் ஒற்றியெடுத்தாள்.
“சார்!..சார்!.ஃபெப்ரலைஸேஷன் வந்திடுச்சி.”—  இது டாக்டர் குமார் இதயம் படபடவென உதற ஆரம்பித்து விட்டது. ..போச்சு.. அவருக்கு வாய் வறட்சியாய் இருந்தது. ஒரு மிடறு தண்ணீர் குடித்தார்... ஒரு நிமிஷம் கண் மூடி கடவுளை தியானித்துக் கொண்டு கடைசி முயற்சியில் இறங்கினார்.
“சிஸ்டர்! இன்ஜெக்‌ஷன் அட்ரினலின் ---2.ஆம்ப்யூல்ஸ்..,அட்ரோபின் –2.ஆம்ப்யூல்ஸ்.ஐ.வி. ப்ளஸ் டோபோமின் -1 ஆம்ப்யூல். க்விக்..க்விக்!..”
“எஸ் டாக்டர்!.”
“ராமன்! காபினோகிராஃபியை ஸ்டடி பண்ணுங்க.( சுவாசத்தில் வெளியாகும் கார்பண்டையாக்ஸைட் அளவைக் காட்டும் கருவி). CO2 விகிதம் கூடியிருக்கு பாருங்க.. கரெக்ட் பண்ணுங்க. க்விக்..க்விக்..”
ஐந்து நிமிடம்..,பத்து., பதினைந்து…,.இருபதாவது நிமிடத்திற்குப் போகும்போது ரத்த அழுத்தம் கூடியது,இ சி ஜி. யின் தடுமாற்றம் சீராகியது. அப்பாடா சேஃப்..
                 டாக்டர் ஆதித்யன் நிதானமாக முகத்தில் ,கழுத்தோரங்களில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தார்.நரம்பியல், எம்சிஎச் இறுதியாண்டு மாணவி டாக்டர்.தாரணி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா?.”
“நான் உங்களையேத்தான் பார்த்துக் கிட்டிருந்தேன் சார். உங்க சர்வீஸ்ல இதைப் போன்ற அல்லது இதைவிட சீரியஸான எத்தனையோ கேஸ்களை ஹாண்டில் பண்ணியிருப்பீங்க. இப்பத்தான் புதுசு மாதிரி எவ்வளவு டென்ஷன்?,என்ன பரபரப்பு?,உங்களுக்கு மாலை மாலையாய் வேர்த்துக் கொட்டியது, கொஞ்ச நேரம் பிரார்த்தனை கூட செஞ்சீங்களே..”
அவர் டேபிள் மீது கிடக்கும் பையனை ஒரு முறை பார்த்தார்..
“இவன் யார்? இவனுக்கும் நமக்கும் என்ன உறவு?. ஆனால் அரை மணி நேரம் நான் மட்டுமில்லை நாம எல்லோரும் ஆடிப்போயிட்டோமே.என்னா பதைபதைப்பு?, ஓடிஓடி செஞ்சோமே. அம்புஜா சிஸ்டர் அவ்வளவு  பெரிய உடம்பை வெச்சிக்கிட்டு இன்ஜெக்‌ஷன் எடுத்திட்டு வர எப்படி ஓடினாங்க?.ஏ.சி.குளிரிலும் வியர்வையில் நனைஞ்சி நிக்கிற ராமனை பாரு.. ஏன்?. உயிரென்பது அத்தனை ப்ரீஷியஸ்.. ஒவ்வொரு டாக்டரும் இப்படித்தான் நினைப்பார்கள்,நினைக்கணும். அந்த உயிருக்காக கடைசிவரை போராடிப் பார்க்கணும்.கடமை மாதிரி செய்ற ஜாப் இல்ல நம்முடையது. ஒரு அர்ப்பணிப்பு, டெடிகேஷன் இருக்கணும் அவன்தான்  டாக்டர் அதிலும் நம்மைப் போன்ற நியூரோ சர்ஜனுக்கு எவ்வளவு அனுபவங்கள் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புது அனுபவங்கள்தான்..ஏன்?சராசரி ஒண்ணரை கிலோ எடைதான் இந்த மூளை. அதுக்குள்ள பத்தாயிரம் கோடிக்கு மேல நியூரான் ஸெல்கள். சாம்பல் நிற கார்ட்டெக்ஸ் பகுதியில் மட்டும் ஒரு கன இஞ்ச்சிற்குள் பதினாராயிரம் கிலோ மீட்டர் நுட்ப நரம்பு கயிறுகள்., இவற்றிற்குள் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஓயாமல் குறுக்கும் நெடுக்கும்,மேலும் கீழும், மில்லி வோல்ட் மின் சிக்னல்களாகவும், ரசாயணப் பொருட்களின் தூண்டல்களாகவும் ஓடித் திரியும் தகவல் மழைகள்.. இவைகள்தானே நாம்?.. இதில் இம்மியளவு இடம் மாறி கத்தி பட்டாலும் அவன் தலையெழுத்தே மாறிவிடும். எஸ்! நம்முடைய ஜாப் அவ்வளவு கடினமானது.”.
                   அவர் பேசியபடி ஆபரேஷன் டேபிள் அருகில் வந்து நின்றார். பக்கத்தில் டாக்டர் டேனியல்,எதிர் பக்கம் டாக்டர் குமார். இரண்டு பக்கங்களிலும் கருவிகளை எடுத்துக் கொடுக்க,ரத்தக் கசிவுகளை ஒற்றியெடுக்க, உதவிக்கு தியேட்டர் அஸிஸ்டண்ட்களும்,நர்ஸ்களும். டாக்டர் தாரணி நாடித்துடிப்பை கண்காணித்துக் கொண்டிருந்தாள்.
“டேனியல்! நீயும்,குமாரும் இந்த சர்ஜரியை செய்யப் போறீங்க. நான் கூட இருக்கேன். மண்டையில ஃப்ரண்டல்,பரீட்டல் லோப்களை துளைச்சிக்கிட்டுத்தான் புல்லட் பாஞ்சிருக்கு,ஸ்டடி பண்ணிட்டீங்களா?.”
“எஸ் சார்!.”
ஜீ.சி.எஸ். கண்டிஷன் சொல்லு.”
“இ1, வி1, எம்3, சார்.”-----இந்தக் குறியீடுகள் கோமாவில் கிடக்கும் நோயாளி மூளையின் செயல் திறனை அளவிட உதவும் ஒரு முறையாகும்..GLASCO COMA SCALE என்று பெயர்.
“ரத்தம் எந்த பகுதியில் தேங்கி அழுத்தம் கொடுக்குது?.”
‘இடது பரீட்டல் லோப் சார்.!.”
“லொகேஷன்?.”
அவர்கள் சற்று நிதானிக்க, தாரணி முந்திக் கொண்டாள்.
“ப்ராட் மேன் ஏரியா-41,42, அண்டு 22 சார்.”
“குட்! ப்ளான் சொல்லு.”
“சார்! புல்லட் துளைச்சிருக்கிற வழியே போயி புல்லட்டை எடுத்திடலாம்,ரத்தத்தையும் வெளியேற்றி விடலாம்.”
டாக்டர் ஆதித்யன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, அந்தப் பையனுடைய சி.டி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களை  நுட்பமாய் ஆராய்ந்தார்.. அனஸ்தட்டிஸ்ட் மயக்க மருந்து ஸ்ப்ரேயை ஆரம்பிக்க, 1. .2. 3. 4. பத்து எண்ணி முடிப்பதற்குள் மருந்தின் ஆதிக்கத்திற்குள் வந்துவிட்டது.. டாக்டர்கள் இருவரும் பர்ஹோல் எனும் மண்டையில் துளை போடும் காரியத்திற்குத் தயாரானார்கள்.
“ராமன்! ஓகே வா?.”
“ஜஸ்ட் எ மினிட் டாக்டர்.”—அவர் அவசரமாக எல்லா மானிட்டர்களையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்.. நாடி?-நிதானமாகியிருந்தது.,உடல் ?-தளர்ந்திருந்தது.,கருவிழிகள் இரண்டும் புருவ மத்தியில் முட்டிக் கொண்டிருந்தன.,கண் பாப்பா விரிந்திருந்தது.முழு மயக்கத்திற்கு போயாகி விட்டது.
“ஓகே சார்!.”
“மேனிட்டால்—200.மி.லி. ஸ்டார்ட்.”---இது டாக்டர் ஆதித்யன்.
நடு மண்டைக்கு இடப்புறமாக குண்டு பாய்ந்திருந்த இடத்தை மையமாக வைத்து துளை போடும் கருவியினால் துளை aபோட்டு துளை வழியே கிரேனியாட்டமி கருவி மூலம் நான்கு சதுரஅங்குலம்  அளவிற்கு மண்டையோட்டு சில்லை பெயர்த்தெடுத்தார்கள். புல்லட் நுழைந்த இடத்தில் மூளையின் மேலுறை கிழிந்து, ரத்தம் உறைந்து கருமையாகத் தெரிந்தது. மூளை வீங்கி துளை வழியே பிதுங்க ஆரம்பித்திருந்தது. ஆதித்யன் குறுக்கிட்டார்.
“வெய்ட்! வீக்கத்தில் மூளை  பிதுங்கி வருது பார்..மேனிட்டால் ட்ரிப் முடியட்டும்..”
                கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு ஆரம்பித்தார்கள். எண்டாஸ்கோப்பின் முனையை உள்ளே நுழைக்க,டியூராவைத்தாண்டி அரக்னாய்டு உறை, அதையும் கடக்க, அடுத்ததாய் பயோமேட்டர். டி.வி. திரையில் காட்சிகள் விரிகின்றன. நெளிநெளியாய் கொசகொசப்புடன் சாம்பல் நிற கார்ட்டெக்ஸ். எதையும் சேதப் படுத்தாமல் நகர, பரீட்டல் பகுதியில் புதைந்திருக்கும் புல்லட்டின்  பின்புறம் தெரிகிறது. லைலா ரெட்ராக்டரின் உதவியுடன் வழியை சற்று அகலமாக்கி, மெதுமெதுவாக அசைத்து அசைத்து புல்லட்டை வெளியே எடுத்தார்கள்.. தமனியிலிருந்து ரத்தம் பீச்சியடிக்கிறது. வழியை அடைத்து உதிரப் போக்கை கண்ட்ரோல் பண்ணி,எண்டாஸ்கோப் முனையை கீழே இறக்க, தேங்கியிருக்கும் ரத்தம் தெரிகிறது. உப்புக் கரைசல் நீரை உள்ளே பீச்சியடித்து, மொத்தமாய் உறிஞ்சியெடுத்தார்கள்.. தேங்கிய ரத்தத்தை துப்புரவாய் வெளியேற்றிய பிறகு வேறு எங்காவது ரத்தக் கசிவு இருக்கிறதா என்று ஒரு அரை மணி நேரம் தரோவாய் தேடி, இல்லையென்று உறுதியான பிறகு, உள்ளிருந்து ஒவ்வொரு பகுதியாக தையல் போட்டு மூட ஆரம்பித்தார்கள்.
                  எல்லாம் முடிந்து பேஷண்ட்டை ஐ.சி.யூ.விற்கு அனுப்ப மாலை நாலு மணியாகிவிட்டது. காலை பத்து மணிக்கு ஆரம்பித்த ஆபரேஷன்.. மொத்தம் ஆறு மணி நேரம்.அந்த டீம் முழுக்க எல்லோரும் பட்டினி.  யாரும் மதிய உணவு சாப்பிடவில்லை.இனிமேல்தான். டாக்டர் ஆதித்யன் ரொம்ப சோர்வாய் உணர்ந்தார். வெலவெலப்பாயிருந்தது..  அவர் சர்க்கரை நோயாளி வேறு. ஆபரேஷன் சக்ஸஸ் என்பதில் எல்லோருக்கும் திருப்தி..அவரவர்களும் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு டைனிங் செக்‌ஷனுக்கு ஓட, டாக்டர் ஆதித்யன் அந்த வயசான பெற்றோர்களைக் கூப்பிட ஆளனுப்பினார்.
“சார்! ப்ளீஸ்! முதல்ல சப்பிடுங்க. நீங்க டயாபட்டிக். பேஷண்ட். வாங்க.”---டாக்டர் டேனியல்.
“இருங்க. பாவம்  பிள்ளையை பெத்தவங்க. அவங்க  வெளியே தவிச்சிக்கிட்டு இருப்பாங்க.. பையன் பிழைச்சிட்டான், நினைவுகளில் அதிகம் பாதிப்பு வராதுன்னு சொல்லணும்...”
“இருக்கட்டும். சப்பிட்டுக் கொண்டே சொல்லுவோம்.”------- அவர்கள் இருவரும் டிபன் பாக்ஸைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். நாலு வாய் சாப்பிட்டிருப்பார்கள். பையனின் பெற்றோர்கள் இன்னும் வரவில்லை. டாக்டர் குமார் பரக்க பரக்க ஓடிவந்தார்.
“டாக்டர்! டாக்டர்!  சீக்கிரம் ஓடியாங்க. அந்தப் பையன் கொலாப்ஸ் ஆயிடுவான் போலிருக்கு.ஃபிட்ஸ் வந்திடுச்சி.’
 இவர்கள் ஓடி..ஓடி அவன் மணிக்கட்டைப் பற்றி நாடி பார்க்க, அதற்குள் அவ்வளவு அவசரமாக அவன் செத்துப் போயிருந்தான். எப்படி?...எப்படி? என்னய்யா நடந்துச்சி?.ச்சே!
”டாக்டர்! ப்ரெய்ன் ஸ்டெம் கிட்ட புதுசா திடீர்னு ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கு.”---டாக்டர் குமார்.
அமைதியாக உட்கார்ந்து விட்டார்.மனசு வெறுமையாக இருந்தது. சே! எதைச் செய்யவும் சான்ஸ் இல்லாம போயிடுச்சி. திரும்பத் திரும்ப அந்த வயசான தம்பதிகளே உள்ளே கதறிக் கொண்டிருந்தார்கள். அடப் பாவி! பைத்தியக்காரா! பெற்றவர்களை சாகடிச்சிட்டு அப்படியென்னடா காதல் உனக்கு? அதுவும் உன்னை புறக்கணித்தவள் மேல். அந்த தம்பதிகளின் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போனது ஒரு பக்கம்., ஹும்! காலையிலிருந்து கொலை பட்டினி கிடந்த பதினைந்து பேர் கொண்ட இந்த  டீம்மின்  ஆறு  மணி நேர உழைப்பு, பரபரப்பு, ஓட்டம், அர்ப்பணிப்பு, எல்லாம் விழலாய் போச்சு..அதற்குள் விஷயம் வெளியே லீக் ஆகி வெளியே ஒரே கூக்குரல்.
                      ஆதித்யன் தன் அஸிஸ்டண்ட்களுடன் கிளம்பி வெளியே வந்தார். பசியில் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன.
“ஐயா! தோ வரானுங்க பாரு. இங்க வாணாம் அப்போலோவுக்குப் போவலாம்னு சொன்னேனே கேட்டியா?. எல்லாம் சேர்ந்துக்கிணு சாவடிச்சிட்டானுங்களே.டாய்!...டாய்!. அவன்களை வுடக்கூடாதுடா. டாய்!.’---கும்பலில் சிலர் இவர்களை அடிக்கும், அல்லது சண்டையிழுக்கும்  நோக்கத்துடன் ஓடிவர, போலீஸ் அவர்களை தடுத்து துரத்தியது.
”நம்ம தம்பிய இவனுங்கதான் என்னமோ பண்ணிட்டானுங்கப்பா.. அடப் பாவிகளா! இங்க முடியாதுன்னு சொல்லிட்டிருந்தா அமெரிக்கான்னாலும் தூக்கிம் போயி என் பிள்ளையை காப்பாத்தியிருப்பேனே. விடமாட்டேண்டா..”---பையனின் அப்பா ஹிஸ்டீரிக்கிளாய் கத்திக் கொண்டிருந்தார்..
கோபமாய் திரும்பிய டேனியலை ஆதித்யன் இழுத்துக் கொண்டு நடந்தார்.  திரும்பி ஒரு க்ளான்ஸ் பார்க்க, நகைக் கடை அதிபர் இவரைப் பார்த்து மண்ணை வாரித் தூற்றி சாபமிட்டுக் கொண்டிருந்தார். அடுத்து சாலை மறியல் வரும். தவறாக  ஆபரேஷன் பண்ணியதால்  நகைக்கடை அதிபர் மகன் சாவு. நீதி விசாரனை வேண்டும் என்று ஊடகங்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு சென்சேஷனல் நியூஸ் போடப் போகின்றன, அந்தப் பையன்  என்னமோ இவருக்கு ஜென்ம விரோதி போல.  ...டாக்டர் டேனியலும், குமாரும் கொதித்துக் கொண்டிருந்தனர்.
”ஆறு மணி நேரமாய் எவ்வளவு போராடினோம்?.என்னா பேச்சு பேசறாங்க பார்த்தியா?. சே! நம்ம உழைப்புக்கே அர்த்தமில்லாம போச்சு.எப்பவும் ஜெயிக்க நாம என்ன கடவுளா?..”
“சும்மா வாங்கப்பா! பாவம் அவங்க  இது இழந்தவங்களுடைய ஆத்திரம்... .இது நமக்கு புதுசா என்ன?. என்ன  பண்றது.?. சாலையோரத்தில இருக்கிற மரம்னா கல்லடி படும்தானே?.
                  ******************************************************************************************************************

நன்றி---திண்ணை.காம், இணையதள இதழ்---06—05—2012 ல் வெளியானது.        -
                         .              
                  
.